இங்கிலாந்தில் 14 ஆவது நூற்றாண்டை சேர்ந்த 150,000 பவுண்ட் மதிப்புள்ள நாணயங்களை 4 நாண்பர்கள் சேர்ந்து உலோக கண்டுபிடிப்பான் உதவியுடன் தோண்டி எடுத்துள்ளனர்.
இங்கிலாந்தை சேர்ந்த 38 வயதான ஆண்ட்ரூ வின்டர் என்பவர் தன்னுடைய சகோதரர் டோபியாஸ் நோவக் (30), மற்றும் நண்பர்கள் மேட்டூஸ் (33) மற்றும் தாரியஸ் ஃபிஜல்கோவ்ஸ்கி (44) ஆகியோருடன் புக்கிங்ஹாம்ஷையர் பகுதியில் மொத்தமாக 550க்கும் அதிகமான நாணயங்களை கண்டுபிடித்துள்ளனர்.
இதில் எட்வர்ட் 1 மற்றும் II ஆகியோர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட 545 வெள்ளி நாணயங்களையும், எட்வர்ட் III காலத்தில் பயன்படுத்தப்பட்ட அரிதான 12 தங்க நாணயங்களையும் கண்டுபிடித்தனர்.
இதுகுறித்து ஆண்ட்ரூ கூறுகையில், அப்பகுதியை சுத்தம் செய்த பின்னர், நான் என்னுடைய சகோதரருடன் சேர்ந்து உலோக கண்டுபிடிப்பான் மூலம் சோதனை செய்தேன். அப்பொழுது தான் வெள்ளி நாணயங்களை பார்த்தோம்.
உடனே தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி இந்த நாணயங்களை கண்டுபிடித்தோம். முதல் நாளில் 276 வெள்ளி நாணயங்களை தோண்டி எடுத்தோம். அடுத்த மூன்று நாட்களுக்கும் 545 வெள்ளி நாணயங்கள் மற்றும் 12 தங்க நாணயங்களை தோண்டி எடுத்தோம்.
600 ஆண்டுகளுக்கு முன்னாள் ஒரு செல்வந்தர், பாதுகாப்பிற்காக இதனை புதைத்து வைத்திருக்க வேண்டும் என நம்புகிறோம். இவை அனைத்தும் ஒரு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட உள்ளன. அதன்பின்னர் இவை விற்பனைக்கு செல்லும் என தெரிவித்துள்ளார்.